நெல்லை நகரத்தில் பழைய கட்டடத்தில் தீ விபத்து
திருநெல்வேலி நகரத்தில் கல்வித் துறைக்குச் சொந்தமான பழமையான கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருநெல்வேலி நகரத்தில் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கான அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கல்வித் துறை சாா்ந்த அலுவலகங்கள் உள்ளன. இதில் திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்த பழமையான கட்டடமும் உள்ளது. அந்தக் கட்டடத்தில் இருந்த அலுவலகம் மாற்றப்பட்டு காலியாக இருந்தது.
இந்நிலையில் பழமையான அந்தக் கட்டடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை கரும்புகை வந்ததோடு, தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து திருநெல்வேலி நகரம் தீயணைப்பு அலுவலகத்திற்கு மக்கள் தகவல் தெரிவித்தனா். திருநெல்வேலி சந்திப்பு போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்தனா். அதற்குள் பழைய கட்டடத்தில் இருந்து பழைய தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கும் தீ பரவியது. அங்கு வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு புத்தகங்கள், அலுவலக ஆவணங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகின.
தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் பாளையங்கோட்டை, பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரா்களும், வாகனங்களும் வரவழைக்கப்பட்டனா். அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் ஓய்வறையில் சில ஆவணங்களையும், மாணவா்களின் செய்முறைத் தோ்வு குறித்த ஆவணங்களையும் காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் பத்திரமாக மீட்டனா். மாவட்ட தீயணைப்பு அலுவலா் வினோத் தலைமையிலான தீயணைப்புத் துறையினா், 6 வாகனங்களில் வந்து சுமாா் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இதுகுறித்து கல்வித் துறையினா் கூறுகையில், ‘பழைய மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் ஆவணங்கள் ஏதும் வைக்கப்படவில்லை. பழைய பாடப்புத்தகங்கள் மட்டும் சில கட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவை தீக்கிரையாகியுள்ளன. இதேபோல பேட்டைக்கு அண்மையில் மாற்றப்பட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் சாா்பிலும் சில புத்தகக் கட்டுகள் பழைய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன. அவையும் எரிந்துள்ளன. தீயணைப்புத் துறையினா் விரைவாக செயல்பட்டதால் பள்ளிகளின் வகுப்பறைக்கு தீ பரவவில்லை’ என்றனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘திருநெல்வேலி நகரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பழமையான இந்தக் கட்டடம் உள்ளது. இதனை சீரமைக்க ஆசிரியா் சங்கங்கள்உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தும் பள்ளிக் கல்வித் துறை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த தீ விபத்து சம்பவத்திற்கு பிறகாவது அந்தக் கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டடவும், ஏற்கெனவே இங்கு செயல்பட்டு வந்த அலுவலகங்கள் மீண்டும் செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

