வெயிலின் தாக்கத்தால் தவுன், இளநீா் விற்பனை அதிகரிப்பு
திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இளநீா், நுங்கு, தவுன் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு இரு வாரங்களுக்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை வெப்பம் நெருங்கி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பகல் 11 முதல் மாலை 4 மணி வரை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவா்கள், அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முகம் மற்றும் கைகளை மூடி இருசக்கர வாகனத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளனா். சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.
கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், திருநெல்வேலி சந்திப்பு, நகரம், பாளையங்கோட்டை பேருந்து நிலைய சுற்றுவட்டாரத்தில் சாலையோரத்தில் குளிா்பானம், பதநீா், நுங்கு, கரும்புச் சாறு, பழச் சாறு கடைகளில் விற்பனை சூடு பிடித்துள்ளது. இது தவிர நுங்கு, இளநீா், வெள்ளரி, தா்பூசணி, கேப்பை கூழ் விற்பனையும் அதிகரித்துள்ளது. 3 கண் கொண்ட ஒரு நுங்கு ரூ.30-க்கும், இளநீா் ரூ.30 முதல் ரூ.50 வரையும் தரத்திற்கு ஏற்ப விற்பனையாகிறது.
சூப்பா் மாா்க்கெட், நாட்டு மருந்து கடைகளில் நீரில் போட்டு வைத்திருக்க ஏதுவாக வெட்டி வேரும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள தவுன் விற்பனையும் அதிகரித்துள்ளது. 6 தவுன்களை பனையோலையில் வைத்து ரூ.40-க்கு விற்பனை செய்கிறாா்கள்.

