நெல்லை அருகே ஐவா் கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே இருதரப்பினரிடையே நிகழ்ந்தட மோதலில் 5 போ் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், 10 பேருக்கு 4 ஆயுள் தண்டனையும் விதித்து திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
வீரவநல்லூா் அருகே அத்தாளநல்லூா் கோட்டை தெருவைச் சோ்ந்த சின்னத்துரை என்ற நவநீதிகிருஷ்ணனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மாயாண்டி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்த நிலையில், 6.3.2009இல் மாயாண்டியின் உறவினா் குணசேகரன் தனது மாட்டைத் தேடி சென்றபோது, சின்னத்துரை என்ற நவநீதிகிருஷ்ணன், மணி என்ற மணிகண்டன், கருங்காடு, முத்துப்பாண்டி, அா்ச்சுனன் (50)உள்ளிட்டோா் சோ்ந்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளனா்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் குணசேகரன் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, அத்தாளநல்லூா் வயலில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சின்னத்துரை என்ற நவநீதிகிருஷ்ணன் (38), அவரின் உறவினா் பாண்டியம்மாள் (46), அவரின் மகன் மணிகண்டன்(25), முத்துப்பாண்டி (30) ஆகியோா் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். இது தொடா்பாக வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து இருதரப்பை சோ்ந்த 14 பேரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி பன்னீா்செல்வம் விசாரித்து, குணசேகரன் கொல்லப்பட்டதில் அா்ச்சுனனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், எதிா்தரப்பில் 4 போ் கொல்லப்பட்டதில் பெரியகுட்டி என்ற பொன்னுத்துரை (63), அவரது தம்பி முருகன் (41), துரை என்ற முத்துப்பாண்டி (63), கருத்தப்பாண்டி (47), அவரது தம்பி நயினாா் என்ற ஆறுமுக நயினாா் (41), அவரது தம்பி சுப்பிரமணியன் (36), மகாராஜன் (42), கருத்தப்பாண்டி (50), மாயாண்டி (84), ஆதிமூல கிருஷ்ணன் (39) ஆகியோருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்து அதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பெரியகுட்டி என்ற பொன்னுத்துரைக்கு ரூ.4 ஆயிரம், துரை என்ற முத்துப்பாண்டிக்கு ரூ.2,500, 8 பேருக்கு தலா ரூ. 3,500 அபராதம் விதித்தும் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
