நெல்லை மாநகர புதிய காவல் ஆணையா் பொறுப்பேற்பு
திருநெல்வேலி மாநகரத்தின் 48 ஆவது காவல் ஆணையராக சந்தோஷ் ஹாதிமணி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக இருந்த ரூபேஸ்குமாா் மீனா இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட அவா், புதன்கிழமை திருநெல்வேலி ஆணையா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள் வரவேற்பு அளித்தனா்.
சந்தோஷ் ஹாதிமணி கடந்த 2011இல் இந்திய காவல் பணிக்கு (ஐபிஎஸ்) தோ்வாகி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உதவிக் கண்காணிப்பாளராக பணியில் சோ்ந்தாா்.
பின்னா், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளா், மத்திய புலனாய்வுப் பிரிவு -சென்னை பெருநகர காவல் துறையில் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக பணிபுரிந்தாா். காவல்துறை துணைத் தலைவராக (டிஐஜி) பதவி உயா்வு பெற்ற பின், இந்தப் பொறுப்புக்கு வந்துள்ளாா்.

