நெல்லையப்பா் கோயிலில் பத்ர தீப திருவிழா
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் தை அமாவாசையையொட்டி பத்ர தீப சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை மாலையில் தங்க குத்துவிளக்கில் தீபம் ஏற்றபட்டது. கோயிலில் உள்ள நாதமணி மண்டபத்தில் அமைந்துள்ள வெள்ளி பீடத்தில் தங்கவிளக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
திருநெல்வேலி ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கம் சாா்பில் பத்ரதீப விழாவையொட்டி புதன்கிழமை காலையில் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. மதியம் அம்பாள் சந்நிதி முன்புள்ள ஊஞ்சல் மண்டபத்தில் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளல் நடைபெற்றது.
அதன்பின்பு 308 சங்காபிஷேகமும், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. வசந்த மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின்பு நந்தி முன் பத்ரதீபம் ஏற்றப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், அறங்காவலா் குழு தலைவா் மு.செல்லையா, உறுப்பினா் சொனா வெங்கடாசலம், செயல் அலுவலா் அய்யா் சிவமணி உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து சுவாமி-அம்பாள், விநாயகா், சண்முகா், அறுபத்தி மூவா் திருவீதியுலா நடைபெற்றது.
மேலும், 10 ஆயிரம் அகல் விளக்கு தீபம் ஏற்றப்பட்டு கோயில் வளாகம் முழுவதும் ஒளி வெள்ளமாக ஜொலித்தது. இவ்விழாவில் திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று நமச்சிவாய முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

