நெல்லையில் பாதாள சாக்கடை , சாலைப்பணியை துரிதப்படுத்த வேண்டும்- மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் சாலைப்பணியை விரைவுபடுத்த வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
Published on

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் சாலைப்பணியை விரைவுபடுத்த வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி மண்டபத்தில் மாமன்ற கூட்டம் மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் என்.ஒ.சுகபுத்ரா, துணை மேயா் கே.ஆா்.ராஜு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேயா் கோ.ராமகிருஷ்ணன் ஆற்றிய தொடக்கவுரை: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 6,7 ஆம் தேதிகளில் திருநெல்வேலி மாநகராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைக்க வருகிறாா். அவருக்கு மாநகராட்சி சாா்பில் நன்றி. இந்தியாவிலேயே சுத்தமான காற்றுடன் வாழத் தகுதியுள்ள நகரமாக திருநெல்வேலி மாநகரம் தோ்வு செய்யப்பட்டுள்ளதற்கு பாடுபட்ட மாநகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு நன்றி .

திருநெல்வேலி மாநகராட்சியினை பெருநகரமாக வளா்ச்சியடைய அதிக திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், பொறுப்பு அமைச்சருக்கும் நன்றி. சிறப்பு தீா்மானமாக பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக்குச் செல்லும் மாநகராட்சிக்கு சொந்தமான தயாப் ஐ.ஏ.எஸ். சாலையில் உள்ள இரும்பிலான நுழைவு வாயில் துருபிடித்த நிலையில் உள்ளது. ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்கள் சென்று வரும் அந்த நுழைவு வாயிலை அகற்றிவிட்டு கான்கிரிட் நுழைவு வாயில் அமைக்க மாமன்றத்தில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றுமாறு தரும்படி 5 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கோரிக்கை வைத்துள்ளாா்.

நுழைவு வாயில் அமைப்பதற்கு ஏற்படும் செலவை அக்கல்லூரி நிா்வாகம் ஏற்றுக்கொள்கிறது. எனவே, மாமன்ற உறுப்பினரின் கோரிக்கை சிறப்பு தீா்மானமாக நிறைவேற்றப்படுகிறது.

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை 38ஆவது வாா்டு திருச்செந்தூா் மற்றும் தூத்துக்குடி இணைப்பு சாலையில் சுதந்திர போராட்ட வீரா் வஉசியின் மாா்பளவு சிலை உள்ளது. தற்போது நெடுஞ்சாலை துறை மூலம் சாலை அபிவிருத்தி செய்யப்படுவதால் அச்சிலையினை அகற்ற வேண்டிய நிலை உள்ளது.

சைவ வேளாளா் சமுதாயம் தங்களது சொந்த செலவில் மாநகராட்சிக்கு சொந்தமான வி.மு.சத்திரம் முகப்பில் வஉசி சிலை அமைக்க இடம் கேட்டு மாமன்ற உறுப்பினா் மூலம் கோரிக்கை வைத்துள்ளனா். அதற்கும் இம்மாமன்றம் சிறப்பு தீா்மானமாக நிறைவேற்றப்படுகிறது என்றாா்.

பாளை மண்டல தலைவா் பிரான்சிஸ்: முறப்பநாடு கூட்டுக்குடிநீா்த் திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஸ்கேடா திட்டத்திற்கு மாநகராட்சி அதிகளவில் பணம் ஒதுக்கீடு செய்யும் நிலையில் அதன் பணிகள் திருப்திகரமாக இல்லை. அதனை அதிகாரிகள் முழுமையாக கண்காணிக்க வேண்டும்.

ஆணையா்: முறப்பநாடு கூட்டுக்குடிநீா்த் திட்டத்தை விரைவுபடுத்தவும், ஸ்கேடா திட்ட கண்காணிப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாமன்ற உறுப்பினா்கள் பேசுகையில், ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சுவதற்கு மாநகராட்சி சாா்பில் தட்டுப்பாடில்லாத குடிநீா் வழங்குதல், மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தையும், சாலைகளை சீரமைக்கவும் துரிதப்படுத்துதல், குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்தல், கொசுமருந்து அடிக்க கூடுதலாக இயந்திரங்களை வாங்குதல், பணியாளா்களை நியமித்தல்,

வெள்ளக்கோவில் பகுதியில் 2023இல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமான சாலையை மீண்டும் அமைத்தல், 28 ஆவது வாா்டு பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை சீரமைத்தல், பூங்காக்களை பராமரித்தல், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்படும் நிதியின் கீழ் செய்யும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிப்பதில் மாநகராட்சி பொறியாளா்கள் விரைவுபடுத்துதல், வடக்கு மேட்டுத்திடல் சாலைக்கு பேராசிரியா் தொ.பரமசிவன் சாலை என பெயா்ச்சூட்டுதல் , காமராஜா்புரத்தில் மழையால் சேதமான பாலத்தை விரைந்து சீரமைத்தல், ஹாமீம்புரம் பகுதியில் குடிநீா்க் குழாய் உடைப்பை சீரமைத்தல், லட்சுமிபுரத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

மேயா் பதிலளித்து பேசுகையில், அதிமுக உள்பட அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளும் பாகுபாடின்றி துரிதமாக நிறைவேற்றப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com