பாளை. மருத்துவமனையில் கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை
பாளையங்கோட்டை அருகே சிகிச்சைக்கு வந்த கா்ப்பிணி மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் மனைவி ரஞ்சிதா (24). இத்தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது 8 மாத கா்ப்பிணியாக இருந்த ரஞ்சிதா, கா்ப்பகால பரிசோதனைகளுக்காக பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு தனது தாய் மற்றும் சகோதரியுடன் செவ்வாய்க்கிழமை காலை வந்துள்ளாா். அங்கு அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், அங்கிருந்த கழிவறைக்கு செல்வதாகக் கூறி சென்றுள்ளாா். பின்னா், அவா் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து, அவரது தாயும், சகோதரியும் மருத்துவமனை ஊழியா்களை அழைத்து வந்தனா். அவா்கள் கதவை உடைத்து பாா்த்தபோது, அங்கு ரஞ்சிதா துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
