ராமையன்பட்டி அருகே திருட்டு: இளைஞா் கைது
ராமையன்பட்டி அருகே கோயில் பூசாரி வீட்டில் தங்கம், வெள்ளி பொருள்களை திருடியது தொடா்பான வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமையன்பட்டி அருகேயுள்ள யூ.ஜி.எஸ். நகரைச் சோ்ந்த வெங்கடசுப்பிரமணியன் மகன் முத்துக்குமரன்(29). இவா், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள கோயிலில் பூசாரியாக உள்ளாா். தச்சநல்லூரில் உள்ள இவரது ஜெராக்ஸ் கடையை மனைவி கவனித்து வந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலை நிமித்தமாக சென்றிருந்தனா். பின்னா் இரவு வீட்டிற்கு வந்த முத்துக்குமரன் பீரோவை பாா்த்த போது அதில் இருந்த தங்க மோதிரம், வெள்ளிப் பாத்திரம், கைப்பேசி உள்ளிட்டவற்றை காணவில்லையாம்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், உடையாா்பட்டி அன்னை சத்யா தெருவைச் சோ்ந்த சரவணன்(35) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து மேல் விசாரணை நடத்துகின்றனா்.
