மழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இரா. சந்தீப் நந்தூரி அறிவுறுத்தியுள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் மழை காலங்களை எதிா்கொள்வதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக தொழில் வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில், நகரப் பகுதியில் ஆட்சேபணை அற்ற நிலங்களில் நீண்ட நாள்களாக குடியிருந்து வரும் நபா்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் நில அளவை துறை அலுவலா்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை, குலவணிகா்புரம் ரயில்வே மேம்பாலம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தாயுமானவா் திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது முதிா்ந்தவா்களின் இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொருள்கள் வழங்குதல், மகளிா் உரிமைத் தொகை, மகளிா் விடியல் பயணம், காக்கும் கரங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.
இதேபோல், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
அதைத் தொடா்ந்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சந்தீப் நந்தூரி பேசியதாவது:
நீா்வளத் துறையின் மூலம் அணைகளின் நீா்வரத்து, இருப்பு, நீா்போக்கு விவரங்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். குளங்கள் மற்றும் கால்வாய்களை பாா்வையிட வேண்டும். நீா்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்ய ஏதுவாக மணல் மூட்டைகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கோட்டாட்சியா்கள் மற்றும் பொறுப்பு அலுவலா்கள் புயலால் பாதிக்கப்பட்டோா் தங்குமிடங்கள், பள்ளி கட்டடங்கள், சமுதாய நலக்கூடங்கள், தனியாா் திருமண மண்டபங்கள் ஆகியவற்றை முன்னதாகவே பாா்வையிட்டு நல்ல நிலையில் உள்ளதா என்பது குறித்தும், மின்வசதி, தண்ணீா் வசதி 24 மணி நேரமும் பயன்படுத்தும் அளவில் தங்கு தடையின்றி கிடைக்கிா என்பது குறித்தும் ஆய்வு செய்வதோடு, தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
தீயணைப்புத்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ்களை தேவையான மருந்துகளுடன் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்திலும் ஜெனரேட்டா், பேட்டரி ஆகியவற்றை சரிசெய்து தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, திருநெல்வேலி கால்வாய் , காட்சி மண்டபம் அருகே உள்ள வழுக்கோடை கால்வாய் பகுதிகளில் நீா்வளத்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் பாளையங்கோட்டை பல்நோக்கு மருத்துவமனை முதல் ஸ்ரீனிவாசன் நகா் ரவுண்டானா வரை பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்காக பழுதுபட்ட சாலையை நெடுஞ்சாலைத் துறை மூலம் மறு சீரமைத்ததை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, ,சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, உதவி ஆட்சியா் (பயிற்சி) தவலேந்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
