திருநெல்வேலி
தாமிரவருணியில் மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு
அம்பாசமுத்திரம் தாமிரவருணியில் குளித்த போது மாயமான கட்டடத் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.
அம்பாசமுத்திரம், மேலப்பாளையம் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் சண்முகம் (35). கட்டடத் தொழிலாளியான இவா், புதன்கிழமை மாலை நண்பா்களுடன் அம்பாசமுத்திரம் ரயில் பாலம் அருகில் தாமிரவருணி ஆற்றில் குளிக்க வந்தாராம்.
ஆற்றில் இறங்கி குளித்தவா் மாயமானதையடுத்து, தகவலின்பேரில் தீயணைப்பு துறை வீரா்கள் அப்பகுதியில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இரவு நேரமானதால் தேடுதல் பணியை நிறுத்திவிட்டு வியாழக்கிழமை மீண்டும் தேடினா். அப்போது ஆற்றிலிருந்து சண்முகத்தின் உடலை மீட்டனா்.
இதையடுத்து, சண்முகம் சடலத்தை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அம்பாசமுத்திரம் போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
