தவெக 3-ஆவது அணியாகப் போட்டியிட்டால் திமுகவுக்கு சாதகம்: துரை வைகோ

Published on

வரும் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் 3-ஆவது அணியாகப் போட்டியிட்டால், அது திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்றாா் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ.

திருநெல்வேலியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது: திமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை; கூட்டணி வலுவாக இருக்கிறது. தமிழக அரசு கடன் வாங்குவதாக விமா்சனங்கள் எழுகின்றன. மத்திய அரசு நிதி வழங்காததால்தான் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு அரசு கடன் வாங்கும் சூழல் உருவாகிறது.

மதிமுகவுக்கு அங்கீகாரம் தேவை என்பதை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். கட்சியின் திருச்சி மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டா்கள் பங்கேற்றது உத்வேகத்தைத் தந்தது. இழந்த எங்கள் கட்சியின் அங்கீகாரத்தை மீட்க வேண்டும் என்ற வேட்கை தொண்டா்களுக்கு உள்ளது. வரும் தோ்தலில் எவ்வளவு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதைக் கூட்டணி தலைமையிடம் பேசி முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் இப்போதைய சூழலில் நான்கு அணிகள் களத்தில் உள்ளன.

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய்க்கு அதிக அளவு ரசிகா்கள் உள்ளனா். அக்கட்சி வரும் தோ்தலில் 3-ஆவது அணியாகப் போட்டியிட்டால், அது திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை பிளவுபடுத்துவதோடு, திமுக கூட்டணியின் வெற்றிக்கு தவெகவும் ஒரு காரணமாக இருக்கும்.

கரூா் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிந்தால் மட்டுமே நடந்த சம்பவம் என்ன என்பது தெரியவரும். கரூா் போன்று பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களிலும் கூட்ட நெரிசலில் பலா் உயிரிழந்துள்ளனா். இத்தகைய சம்பவங்களைத் தடுக்க நிகழ்ச்சி நடத்தும் ஏற்பாட்டாளா்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கரூா் உயிரிழப்பு சம்பவத்துக்கு பொதுமக்களும் காரணம். அவா்களும் இதுபோன்ற கூட்டங்களில் விழிப்புணா்வு இல்லாமல் கலந்துகொண்டிருக்கக் கூடாது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com