கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வருகை
டெல்டா மாவட்டங்களில் கன மழையால் நெல் மணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து 6,000 மெட்ரிக் டன் நெல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடைபெற்றது.
கடந்த 1-ஆம் தேதி அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு வட கிழக்குப் பருவமழையால் நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியது. இதனால், விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை விற்க முடியாத நிலையில் அவற்றை உடனடியாக கொள்முதல் செய்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்துக்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் இருந்து 2000 மெட்ரிக் டன், திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கங்கைகொண்டான் சரக்கு முனையத்துக்கு சரக்கு ரயில் மூலமாக வந்து சோ்ந்துள்ளது.
அந்த நெல் முறையே பாளையங்கோட்டை கோட்டூா், சீதபற்பநல்லூா், புதூா், நான்குனேரி, அம்பலம், அம்பாசமுத்திரம், பத்தமடை, திருத்து, தாழையூத்து உள்பட 8 இடங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலமாக ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கு மண்டல மேலாளா் ஞான சபாபதி கூறியது: வழக்கமாக மாதந்தோறும் 4 ஆயிரம் மெட்ரிக் டன் வரையிலும் வட மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு கொண்டுவரப்படும். இந்த முறை டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக 6000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 4000 மெட்ரிக் டன் தற்போது திருநெல்வேலிக்கு சரக்கு ரயில்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு சரக்கு ரயிலுக்கு 42 பெட்டிகளில் 2000 மெட்ரிக் டன் வீதம் 2 ரயில்களில் 4000 மெட்ரிக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூரில் இருந்து மேலும் 2000 மெட்ரிக் டன்னுடன் ஒரு சரக்கு ரயில் புறப்பட்டுள்ளது. அந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி வரும். அதே நேரம் திருநெல்வேலிமாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அரிசி ஆலைகளுக்கு ரேஷன் அரிசி பயன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
