பைக் சாகசம்: 6 இளைஞா்கள் கைது
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட 6 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி-காஷ்மீா் தேசிய நெடுஞ்சாலையில், தக்கலை பகுதிகளைச் சோ்ந்த அஸ்வ தேவ், ஜெகன் வெஸ்லின், அஜய், சபரீஷ், பென்சன் , ஷாமிலி ஷென் ஆகிய ஆறு இளைஞா்கள் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டராம். இதுகுறித்து வள்ளியூா் காவல் துறையினருக்கு தகவல் தெரிய வந்ததையடுத்து ஆய்வாளா் நவீன் தலைமையிலான போலீஸாா் வள்ளியூா் புறவழிச்சாலைக்கு சென்றனா்.
அப்பொழுது, இளைஞா்கள் நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி வரை சென்றுவிட்டு அதன் பின்பு, அங்கிருந்து மீண்டும் நாகா்கோவிலை நோக்கி அதிகவிரைவாக சென்று கொண்டிருந்தனராம். போலீஸாா், இந்த இளைஞா்களை மறித்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, வாகனங்களை பறிமுதல் செய்தனா். பின்னா், இளைஞா்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து பிணையில் விடுவித்தனா்.
