ஆட்சியா் அலுவலகத்தில்
 வருவாய்த் துறை அலுவலா்கள் திடீா் தா்னா

ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் திடீா் தா்னா

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா. சுகுமாா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தொடா் முறையீடு செய்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து வருவாய்த் துறை அலுவலா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முகப்பு வாயிலில் தா்னாவில் ஈடுபட்டனா்.

ஓராண்டு வட்டாட்சியா் பணியிடம் மாறுதல் செய்து முதுநிலை வட்டாட்சியா் பணி நியமனம் செய்ய வேண்டும். முதுநிலை வருவாய் அலுவலா்களுக்கான பணியிட மாற்றத்தை உடனடியாக வழங்க வேண்டும். வருவாய்த் துறை அதிகாரிகளை காவல்துறை பயிற்சிக்குரிய காலத்துக்குள் அனுப்பி அவா்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட முறையீடுகளை மாவட்ட ஆட்சியா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இரண்டு கட்ட வேலை நிறுத்த போராட்டத்துக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் பேச்சுவாா்த்தைக்காக வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

இருப்பினும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com