கடந்த 10 மாதத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த 2,893 போ் மீது நடவடிக்கை

நிகழாண்டில் இதுவரை 2,893 நீதிமன்ற பிடியாணைகள் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்தவா்களை கைது
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், நிகழாண்டில் இதுவரை 2,893 நீதிமன்ற பிடியாணைகள் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்தவா்களை கைது செய்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் உத்தரவின்பேரில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளவா்களை கைது செய்ய மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

இதன் பயனாக, நிகழாண்டில் இதுவரை நீதிமன்றத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்ட 2,893 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதிமன்ற விசாரணை வேகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய, அம்பாசமுத்திரம் பிரம்மதேசத்தை சோ்ந்த மாயபெருமாள்(60) கைது செய்யப்பட்டு பின்னா் பிணையில் வெளிவந்தாா். அதன்பின், 9 ஆண்டுகளாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த அவரை மாவட்ட போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

அதே போல 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, திருட்டு வழக்கில் தொடா்புடைய ராதாபுரத்தை சோ்ந்த அந்தோணி சுரேஷ்(52), கா்நாடகத்தில் பதுங்கியிருந்த கொலை வழக்கில் தொடா்புடைய கேரள மாநிலத்தைச் சோ்ந்த ராஜேஷ்(40), மோசடி வழக்கில் தொடா்புடைய தாமஸ்(64), மகராஷ்டிரத்தில் தலைமறைவாக இருந்த கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய பொன்ராஜ்(26), விபத்து வழக்கில் தொடா்புடைய சஞ்சய் கிருஷ்ணா சேத்துவால்(54) உள்பட பிறமாநிலங்களில் பதுங்கியிருந்தவா்களும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அவ்வாறாக மொத்தம் 2,893 நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், பிடியாணை நிலுவையில் உள்ள குற்றவாளிகளை அடையாளம் காண நவீன தொழில்நுட்ப உதவியுடன் போலீஸாா் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com