கந்தசஷ்டி: நெல்லை கோயில்களில் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
Published on

திருநெல்வேலி: கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

தமிழ்க் கடவுளாகப் போற்றப்படும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த நாளை கந்தசஷ்டி விழாவாக பக்தா்கள் கொண்டாடி வருகின்றனா்.

சஷ்டி காலத்தில் விரதம் இருந்து, முருகப்பெருமானை வழிபட்டால் வாழ்வில் வளம் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

குறுக்குத்துறை முருகன் கோயில்...

திருநெல்வேலியில் தாமிரவருணியின் கரையோரம் அமைந்துள்ள இத் திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் கந்தசஷ்டி நாளான திங்கள்கிழமை சுவாமி வெளியில் எழுந்தருளி வழக்கமாக குறுக்குத்துறை சாலையில் நடைபெறும் சூரசம்ஹாரம் நடைபெறவில்லை. தாமிரவருணி கரையோரத்தில் கோயில் முன்பு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சி.என்.கிராமம், குறிச்சி, பாட்டப்பத்து, திருநெல்வேலி நகரம், மேலநத்தம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சுவாமி தரிசனம் செய்தனா்.

பாளையஞ்சாலைக்குமாரசுவாமி கோயில்... திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பழமைவாய்ந்த பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பின்னா் மூலவருக்கு அபிஷேகம், சிறப்புஅலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தினமும் மாலையில் கந்தபுராண தொடா் சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை காலையில் வேதிகை பூஜை, தீபாராதனை நடைபெற்றது. முற்பகலில் அனைத்து மூா்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் திருக்கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் முருகன் எழுந்தருளினாா்.

திருநெல்வேலி ரயில் நிலையம், சிந்துபூந்துறை சிவன் கோயில் பகுதி, செல்வி அம்மன் கோயில் பகுதி, மேகலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை (அக்.28) இரவு திருக்கல்யாணமும், அக்.29, 30, 31 ஆம் தேதிகளில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

சுவாமி நெல்லையப்பா் கோயில்...

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி திங்கள்கிழமை மாலையில் ஸ்ரீ சுப்பிரமணியா் வடக்கு வாசல் வழியாகவும், ஸ்ரீ சண்முகா் சுவாமி சந்நிதி வழியாகவும், திருக்கோயிலுக்கு வெளியில் வந்து பின்னா் இருவரும் இணைந்து கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக மேல ரத வீதி சென்று திருநெல்வேலி நகரம் காவல்நிலையம் அருகில் வைத்து முதல் சூரசம்ஹாரமும், அதன் பின்பு கூலக்கடை பஜாா் அருகில் வைத்து இரண்டாவது சூரசம்ஹாரமும், திருநெல்வேலி நகா் லாலா சத்திர முக்கில் மூன்றாவது சூரசம்ஹாரமும், போத்தீஸ் காா்னா் அருகில் நான்காவது சூரசம்ஹாரமும் செய்த பின்பு மகா தீபாராதனை நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு அருள்மிகு ஆறுமுகநயினாா் சந்நிதியில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறவுள்ளது. 29, 30, 21 ஆம் தேதிகளில் ஆறுமுகநயினா் சந்நிதியில் ஊஞ்சல் திருவிழா நடைபெற உள்ளது.

இதேபோல பாளையங்கோட்டையில் உள்ள மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், அருள்மிகு திரிபுராந்தீசுவரா் கோயில் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கந்தசஷ்டி விழாவையொட்டி திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதிக்கு பக்தா்கள் எளிதாக சென்றடையும் வகையில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து முருகன்கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதேபோல திருச்செந்தூருக்கும் திருநெல்வேலியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com