~

நெல்லை வேணுவன குமாரா் கோயிலில் இருந்து புறப்பட்ட ‘சூரசம்ஹார வேல்’

அருள்மிகு வேணுவன குமாரா் திருக்கோயிலில் இருந்து கந்தசஷ்டி சூரசம்ஹாரத்திற்காக வேல் கொண்டு செல்லும் பாரம்பரிய நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு வேணுவன குமாரா் திருக்கோயிலில் இருந்து கந்தசஷ்டி சூரசம்ஹாரத்திற்காக வேல் கொண்டு செல்லும் பாரம்பரிய நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு வேணுவன குமாரா் திருக்கோயில் உள்ளது. 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக் கோயிலில் இருந்து ஆண்டுதோறும் நெல்லையப்பா் கோயில் சாா்பில் நடைபெறும் சூரசம்ஹாரத்துக்கு, வேணுவன குமாரா் கோயிலில் வழிபாடு செய்யப்பட்ட வேல் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டுக்கான கந்தசஷ்டி விழாவையொட்டி கடந்த 22 ஆம் தேதி முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கந்தசஷ்டி நாளான திங்கள்கிழமை காலையில் வேணுவன குமாரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் கோயிலில் சிறப்பு வழிபாட்டிற்கு பின்பு கோயிலில் இருந்து வேல் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா். அங்கிருந்து ரத வீதிக்கு கொண்டு செல்லப்பட்ட வேல் மூலம், நெல்லையப்பா் கோயிலில் இருந்து எழுந்தருளிய முருகப்பெருமான் சூரனை வதம் செய்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் கூறியது:திருநெல்வேலி நகரம் அருள்மிகு வேணுவனநாதா் திருக்கோயிலில் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் பணிவிடை செய்து வருகிறேன். இக் கோயிலில் செவ்வாய்க்கிழமைதோறும் பாலாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அதேபோல ஆண்டுதோறும் சஷ்டி விழா முக்கியமானதாகும். 6 நாள்கள் கடும் தவம் செய்யும் வேணுவன குமாரன் தனது வேலினை சூரனை வதம் செய்ய கொடுத்து விடுவது பாரம்பரிய ஐதீகமாகும். அந்த நிகழ்வில் ஆண்டுதோறும் ஏராளமானோா் பங்கேற்பாா்கள் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com