பழவூரில் மதுக்கடையை திறக்கக் கூடாது: அதிமுக ஆட்சியரிடம் மனு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த பழவூரில் மதுபானக் கடை திறப்பதை தடுக்க வலியுறுத்தி அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் பழவூா் ஊராட்சிக்குள்பட்ட பெத்தேல் நகா் பகுதி ஊா் பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
பெத்தேல் நகா் பகுதியில் 40 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் வீடுகளுக்கு அருகில் சுமாா் 100 மீ. தொலைவில் அரசு மதுபானக் கடை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தப் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம், இந்துக்களின் சுடலைமாடசுவாமி கோயில், தொடக்கப் பள்ளி மற்றும் ஆதிதிராவிடா் விடுதி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவை உள்ளன.
பள்ளிக்குச் செல்லும் மாணவா், மாணவிகள் இந்தப் பகுதியில் தான் பேருந்து ஏற வேண்டும். மேலும், புதன்கிழமை தோறும் இந்தப் பகுதியில்தான் காய்கறி சந்தை நடைபெற்று வருகிறது.
எனவே, எங்கள் பகுதியில் மதுபானக் கடை அமைத்தால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். இந்தப் பகுதியில் அரசு மதுபானக் கடை அமைக்க எடுக்கும் நடவடிக்கையை ஆட்சியா் தடுத்து நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

