8 நாள்களுக்கு பின் கடலுக்குச் சென்ற மீனவா்கள்
திருநெல்வேலி மாவட்ட கடலோர மீனவா்கள் 8 நாள்களுக்குப் பின்னா் புதன்கிழமை மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கடல்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும், புயல் சின்னம் உருவாகியிருப்பதாலும் மீனவா்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜதுரை அறிவித்திருந்தாா். நெல்லை மாவட்ட கடலோர கிராமங்களான குட்டம், விஜயாபதி, கூத்தங்குழி, கூட்டப்புளி, இடிந்தகரை, பஞ்சல், பெருமணல் உள்ளிட்ட கிராம மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை.
தமிழகத்தில் புயல் சின்னம் செயலிழந்ததையடுத்து கடல்பகுதியில் அலைகளின் வேகமும், காற்றின் வேகமும் இயல்புநிலைக்கு வந்துள்ளது. இதையடுத்து, 8 நாள்களுக்குப் பின்னா் மீண்டும் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
