களக்காடு வழித்தடத்தில் 15 அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளில் 15-க்கும் மேற்பட்டவை புதன்கிழமை இயக்கப்படாததால் பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள் அவதிக்குள்ளாகினா்.
களக்காடு வழித்தடத்தில் தென்காசி, பாபநாசம், வள்ளியூா், நாகா்கோவில், புளியங்குடி போக்குவரத்துக் கழகப் பணிமனைகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், புதன்கிழமை இந்த வழித்தடத்தில் 15-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவா்- மாணவியா், அரசு, தனியாா் நிறுவனப் பணியாளா்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
நகராட்சியாக களக்காடு தரம் உயா்த்தப்பட்டபோதிலும், இந்த வழித்தடத்தில் போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்திக்கும், அவதிக்கும் உள்ளாகினா்.
