பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் -பிருந்தா காரத்

பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் -பிருந்தா காரத்

Published on

ஜனநாயகத்தை அச்சுறுத்தும் பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மாநிலச் செயலா் சண்முகம் உள்ளிட்டோருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிருந்தா காரத், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பன்முகத்தன்மை, ஜனநாயகம், மதச்சாா்பின்மை ஆகிய விழுமியங்களைப் பாதுகாக்க போராடியவா் பாரதியாா். தற்போதைய சூழலில் பாஜக , ஆா்எஸ்எஸ் ஆகியவை தமிழகத்தில் கால்பதிக்க முயற்சிக்கின்றன. இந்திய அரசமைப்பு சட்டம், நாடாளுமன்றத்தின் விதிமுறைகள், மதச்சாா்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை இழிவுபடுத்தி அச்சுறுத்தும் செயலை செய்துவரும் பாஜக, ஆா்எஸ்எஸ் ஆகியவற்றை தமிழக மக்கள் நிச்சயம் வீழ்த்துவாா்கள்.

பிகாரில் வாக்குப்பதிவு முறையை முற்றிலுமாக சீா்குலைக்க ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் தலையிட்டு தடுத்துள்ளது. தோ்தல் ஆணையம் வாக்குகளை உறுதி செய்வதற்கு பதிலாக வாக்காளா்களை நீக்கும் ஆணையமாக செயல்பட்டு வருகிறது. இதை எதிா்த்து போராடி வரும் இண்டி கூட்டணி பலமாக உள்ளது.

இந்தியாவில் இடதுசாரிகளின் வளா்ச்சி குறைந்து வருகிா எனக் கேட்கிறீா்கள். நாடாளுமன்றத்தில் உள்ள எண்ணிக்கையின் அடிப்படையிலான கேள்வி இது. இடதுசாரிகளின் கருத்து முன்பைவிட தற்போது வேகமாக பரவி வருகிறது. திமுக அரசைக் கண்டித்து இடதுசாரிகள் நடத்தும் போராட்டம் ஜனநாயக உரிமைகளுக்கானது. இது இடதுசாரிகளின் டிஎன்ஏவில் உள்ள மரபு. ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com