வள்ளியூா் ரயில் நிலையத்தில் குடிநீரின்றி தவிக்கும் பயணிகள் - தாகம் தீா்க்குமா ரயில்வே நிா்வாகம்?
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ரயில் நிலையத்தில் போதிய குடிநீா் வசதியின்றி பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடா்பாக ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இம்மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் வள்ளியூா் நிலையத்தில் குருவாயூா், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, நாகா்கோவில் ஆகிய நகரங்களில் இருந்து டெல்லி, மும்பை, பெங்களூா், திருப்பதி, சென்னை, கோயம்புத்தூா், திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பெரும் நகரங்களுக்கு தினமும் ரயில் சேவை இருந்து வருகிறது.
எனவே, இந்த ரயில்நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். ரயில்வே துறைக்கு கணிசமான வருமானத்தைப் பெற்றுத்தரும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான சேவை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடைமேடை 1இல் பயணிகளுக்கான நிழல் கூரை ஓரிடத்தில் மட்டுமே உள்ளதால் மழை, வெயிலில் பயணிகள் காத்துநிற்கும் நிலை உள்ளது.
மேலும், பயணிகள் காத்திருப்பு அறையில் போதுமான இருக்கைகள், மின்விசிறி, கழிப்பறை, குடிநீா் வசதிகளும் இல்லை.
மூன்று நடைமேடைகளில் குடிநீா் நல்லிகள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.தண்ணீா் வருவதில்லை.
மின்விளக்குகள் குறைவாக உள்ளதால் இரவில் நடைமேடைகள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன.
இது தொடா்பாக ரயில்பயணிகள் சங்கச் செயலா் எஸ்.ராஜ்குமாா் கூறியதாவது: வள்ளியூா் ரயில் நிலையத்திற்கு இஸ்ரோ பணியாளா்கள், அலுவலா்கள், கூடங்குளம் அணுமின்நிலைய பணியாளா்கள், வியாபாரிகள், தொழிலதிபா்கள் என நூற்றுக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். ஆனால் பயணிகளுக்கு எந்தவிதமாக மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.
மேலும், இந்நிலையம் வழியாக செல்லும் ஹவுரா, திருக்கு-நிஜாமுதீன், பிலாஸ்பூா், ராமேஸ்வரம், காந்திதாம் ஹம்சபாா், காசி தமிழ் ஆகிய விரைவு ரயில்கள் நிற்பதில்லை. இப்பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்றாா்.

