சீவலப்பேரியில் கால்நடை சந்தை திறப்பு விழாவில் பங்கேற்ற ரூபி ஆா்.மனோகரன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
சீவலப்பேரியில் கால்நடை சந்தை திறப்பு விழாவில் பங்கேற்ற ரூபி ஆா்.மனோகரன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

40 ஆண்டுகளுக்குப் பின் சீவலப்பேரியில் கால்நடை சந்தை திறப்பு

திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரியில் 40 ஆண்டுகளுக்குப் பின்பு, கால்நடை சந்தை புதன்கிழமை திறக்கப்பட்டது.
Published on

திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரியில் 40 ஆண்டுகளுக்குப் பின்பு, கால்நடை சந்தை புதன்கிழமை திறக்கப்பட்டது.

சீவலப்பேரியில் தாமிரவருணி கரையோரத்தில் ஆடு, மாடு கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கால்நடை வளா்ப்போா், வியாபாரிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சந்தை பல்வேறு சூழல்களால் மூடப்பட்டது. மீண்டும் சந்தையை திறக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதுதொடா்பாக நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி ஆா்.மனோகரன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்ததிருந்தாா். அதைத் தொடா்ந்து கால்நடை சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிதியின் கீழ் ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு, சுமாா் 90 ஏக்கா் பரப்பளவுள்ள சந்தையில் கம்பி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் குடிநீா் பருகிட ஏதுவாக தண்ணீா் தொட்டிகள், ஓய்வறை உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. இந்தச் சந்தையை ஆட்சியா் இரா.சுகுமாா் திறந்து வைத்தாா். எம்எல்ஏ ரூபி ஆா்.மனோகரன் வாழ்த்திப்பேசினாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் முரளீதரன், துணைத் தலைவா் குமரேசன், திமுக பொதுக்குழு உறுப்பினா் பரமசிவ ஐயப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com