நெல்லையில் முதியவரிடம் இணையவழியில் ரூ.15 லட்சம் மோசடி

திருநெல்வேலியில் முதியவரிடம் இணையவழியில் ரூ.15 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து மாநகர இணையவழி (சைபா்) குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Published on

திருநெல்வேலியில் முதியவரிடம் இணையவழியில் ரூ.15 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து மாநகர இணையவழி (சைபா்) குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பாளையங்கோட்டை அருகே பெருமாள்புரம் அழகா் நகா் பகுதியைச் சோ்ந்த 77 வயது முதியவரை, கடந்த டிசம்பா் மாதம் வாட்ஸ் ஆப் மூலம் விக்ரம் ரத்தோா் என்ற பெயரில் ஒரு நபா் தொடா்பு கொண்டாராம். அப்போது, உங்களது ஆதாா் எண்ணை பயன்படுத்தி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அதன் மூலம் பண மோசடி நடைபெற்றுள்ளது; உங்களை கைது செய்யப்போகிறோம் என மும்பை போலீஸாா் போல் பேசினாராம்.

மேலும், அமலாக்கத்துறை வழக்குரைஞா் பேசுவதாகக் கூறிய மற்றொரு நபா், வழக்கிலிருந்து விடுவிக்க உதவுவதாக முதியவரிடமிருந்து ரூ.15 லட்சத்தை வங்கிக்கணக்கில் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com