திருப்புடைமருதூா் கோயிலில் நாளை தைப்பூச பெருந்திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், திருப்புடைமருதூரில் உள்ள கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன.23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, கோயிலில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், மாலை 5.30 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு ரக்ஷா பந்தனம், 10 மணிக்கு காளி உற்சவம், சிம்ம வாகனத்தில் காளி வீதியுலா நடைபெறும்.
வெள்ளிக்கிழமை (ஜன.23) காலை 9 முதல் 10 மணிக்குள் கொடியேற்றம், மாலை அப்பா் வீதி உலா, இரவு சுவாமி அம்பாள் புறப்பாடு, ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும். திருவிழா நாள்களில் காலை பூங்கோயில் சப்பரம், இரவு சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெறும்.
ஜன.31ஆம் தேதி, காலை 8.45 மணியளவில் தேரோட்டம், இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி அம்பாள் எழுந்தருளல் நடைபெறும். பிப்.1ஆம் தேதி, தைப்பூசத்தை முன்னிட்டு பகல் 1.30 மணிக்கு ரிஷப லக்கனத்தில் தீா்த்தவாரி, மாலை அபிஷேக ஆராதனை, இரவு தெப்ப உற்சவம் நடைபெறும்.
பிப். 2 ஆம் தேதி, காலை சுவாமி அம்பாள் வீதி உலா, மதியம் சாஸ்தா ப்ரீதி, மாலை சண்டிகேஸ்வரா் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா, பைரவா் சிறப்பு பூஜை நடைபெறும்.பக்தா்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சேரன்மகாதேவி, வீரவநல்லூா், அம்பாசமுத்திரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
