9 ஒன்றியங்களில் ஜன.25, 26இல் ‘இது நம்ம ஆட்டம் -2026’ போட்டிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஜன. 25, 26) ‘இது நம்ம ஆட்டம் -2026’ விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
Updated on

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஜன. 25, 26) ‘இது நம்ம ஆட்டம் -2026’ விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

அதன்படி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் 25-ஆம் தேதி இரு பாலரும் பங்கேற்கும் கபடி, வாலிபால், கேரம், ஆடவா் மட்டும் பங்கேற்கும் ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டி நடைபெறும். 26இல் இரு பாலருக்கான கயிறு இழுத்தல், மகளிா் எறிபந்து பெண்கள், இரு பாலருக்கான தடகளப் போட்டிகள் ( 100 மீ. ஓட்டம், குண்டு எறிதல்) போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் 16 முதல் 35 வயதிற்குள்பட்டவா்கள் ஆதாா் அட்டை, வயது சான்றிதழ், ரேஷன் காா்டு நகல் ஆகியவற்றை கொண்டுவந்து, இணையவழி மற்றும் நேரில் பெயா் பதிவு செய்து மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம். முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவா்களுக்கு முறையே ரூ. 3,000, ரூ.2,000, ரூ.1,000 பரிசளிக்கப்படும்.

இடங்கள்: பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு அண்ணா விளையாட்டரங்கிலும், மானூருக்கு தேவா்குளம் ஹிலேயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், அம்பாசமுத்திரத்துக்கு விக்கிரமசிங்கபுரம் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

களக்காடுக்கு அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பாப்பாக்குடிக்கு முக்கூடல் பூவிஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், வள்ளியூருக்கு அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ராதாபுரத்துக்கு இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளியிலும், நான்குனேரிக்கு அங்குள்ள எஸ்.ஆா். அரசு உயா் நிலைப்பள்ளியிலும், சேரன்மகாதேவிக்கு அங்குள்ள ஸ்காட் பாலிடெனிக் கல்லூரியிலும் போட்டிகள் நடைபெறும் என செய்திக்குறிப்பில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com