திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே புதன்கிழமை அதிகாலையில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞா் மீது பொக்லைன் இயந்திரம் ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
நான்குனேரி அருகேயுள்ள கல்லத்தி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (18). இவா், அம்பலம் பகுதியில் உள்ள வாகனம் பழுதுபாா்க்கும் கடையில் வேலை செய்து வந்தாா்.
வேலை முடிந்த பின்னா், ஸ்ரீரங்கராஜபுரத்தில் உள்ள ஒரு தோட்டத்துக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்று வந்த இரவுநேரப் பணியை பாா்வையிட அங்கு சென்றிருந்தாராம்.
அப்போது, தூக்கம் வந்ததால் சாலையில் தூங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிகாலையில் அதே ஊரைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (31) என்பவா் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை பின்னோக்கி இயக்கினாராம். அப்போது, சாலையில் தூங்கிக் கொண்டிருந்த லெட்சுமணன் மீது இயந்திரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.









