கயத்தாறில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பூமி பூஜை

கயத்தாறில் புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புக்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

கயத்தாறில் புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புக்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
கயத்தாறில் ரூ.277.48  லட்சம் மதிப்பில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புக்கான புதிய கட்டடம் கட்டப்படும் என  தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, கயத்தாறு காவல் நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்திற்கு இடைபட்ட காலி இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஆகியோர் பூமி பூஜையை தொடங்கிவைத்தனர்.
மொத்தம் 12,697 சதுரடி பரப்பளவில் வட்டாட்சியர் அலுவலகத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளமும், 966 சதுரடியில் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடமும் கட்டப்படவுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூமி பூஜையை தொடர்ந்து, 95 பயனாளிகளுக்கு வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நலத் திட்ட உதவிகளை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் செ.ராஜு ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை, கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் லிங்கராஜ், துணை வட்டாட்சியர்கள் பாஸ்கர், அய்யப்பன், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சீனிவாசன், முத்துகுமார் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
 கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி:  ரூ.261.96 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர் அறைகளுக்கான புதிய கட்டட  கட்டுமானப் பணிகளை  அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார்,  கடம்பூர் செ.ராஜு ஆகியோர் அடிக்கல் நாட்டி  தொடங்கிவைத்தனர். 
இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் பரமசிவன்,  ஊராட்சி ஒன்றிய ஆணையர் கிரி,  வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம்,  கல்லூரி முதல்வர் (பொ) ஜோசப் சுரேஷ், பொதுப்பணித் துறை நிர்வாகப் பொறியாளர் சத்தியவாகீஸ்வரன், உதவிப் பொறியாளர் துரைசிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மோகன்,  சின்னப்பன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com