தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வீடுகள் சேதம்

கஜா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் 5 வீடுகள் சேதமடைந்தன.

கஜா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் 5 வீடுகள் சேதமடைந்தன.
 கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும், சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய அளவு பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
 இருந்தபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வெள்ள பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்ட 36 இடங்களில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும், மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. கப்பல் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 8 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
 இதற்கிடையே, கஜா புயல் கரையை கடந்தபோது வியாழக்கிழமை நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டத்தில் காற்று பலமாக வீசியது. மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. தூத்துக்குடி மேல அழகாபுரியில் உள்ள பார்வதி என்பவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. 
 வீட்டுக்குள் இருந்த பார்வதி, அவரது மகன் மாரிமுத்து, மகள் பொன்னம்மாள் ஆகியோர் அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறினர். வீட்டில் இருந்த பீரோ, கட்டில், தொலைக்காட்சிப்பெட்டி, இருசக்கர வாகனம் ஆகியவை முற்றிலும் சேதமடைந்தன. 
இதேபோல, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 5 வீடுகள் சேதமடைந்தன. இருப்பினும் உயிர் சேதம் ஏதும் நிகழவில்லை.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு வரை 192.30 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. அதிகபட்சமாக காயல்பட்டினம் பகுதியில் 50 மி.மீ. மழை பதிவாகியது. தூத்துக்குடியில் 46 மி.மீ., திருச்செந்தூரில் 32 மி.மீ., வைப்பாறு பகுதியில் 17 மி.மீ., கோவில்பட்டி பகுதியில் 15 மி.மீ., குலசேகரன்பட்டினத்தில் 10 மி.மீ., கழுகுமலையில் 9 மி.மீ. என அளவில் மழை பதிவாகியது. தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க வெள்ளிக்கிழமை செல்லவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com