வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: முதன்மைச் செயலர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, தமிழக கதர்துறை முதன்மைச் செயலரும், மாவட்ட பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அலுவலருமான குமார் ஜெயந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதன்மைச் செயலர் பேசியது:
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து வகையான, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதிக்கப்படும் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும்.
 மேலும், பாதுகாப்பு மையத்தில் தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி  மாவட்டத்தில், கனமழையினால் பாதிப்பு ஏற்படும் 36 இடங்களை தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும்.  மழைக்காலங்களில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். பொது மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள தேவையான குழுக்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். 
மழைக்காலங்களில் உடனடியாக அனைத்து அலுவலர்களையும் தொடர்பு கொள்ளும் வகையில் தங்களது சரியான செல்லிடைப்பேசி எண்களை மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்க வேண்டும். மேலும், மழைக்காலங்களில் துறை அலுவலர்கள் தங்களது பணிகளை ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
 கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், சார் ஆட்சியர் பிரசாந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), கோவிந்தராசு (திருச்செந்தூர்), உதவி இயக்குநர்கள் மாகின் அபூபக்கர் (பேரூராட்சிகள்), உமா சங்கர் (ஊராட்சிகள்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com