கோவில்பட்டியில் சமாதானக் கூட்டம்

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாண்டவர்மங்கலம் கிராமத்திலுள்ள பள்ளிவாசல் எந்த அமைப்பினருக்கு

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாண்டவர்மங்கலம் கிராமத்திலுள்ள பள்ளிவாசல் எந்த அமைப்பினருக்கு சொந்தம் என்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்த சமாதானக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாண்டவர்மங்கலம் ஊராட்சி, தென்றல் நகரிலுள்ள தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் எந்த அமைப்பினருக்கு சொந்தம் என்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனை சம்பந்தமாக மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக இரு தரப்பினரிடையே சமாதானக் கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அமுதா தலைமையில் நடைபெற்றது. 
கூட்டத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், வட்டாட்சியர் பரமசிவன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சூர்யகலா, மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், வருவாய் ஆய்வாளர் மோகன், பாண்டவர்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் மற்றும்  இரு தரப்பைச் சேர்ந்த முகமது அபுபக்கர், முகமது பைசல், நேஷனல் சாகுல், சம்சுதின், அசாரூதின், அப்துல்ரஹீம், மஸ்ஜீத் தவ்கித், செய்து சல்மான், மாபு ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:   பள்ளிவாசல் நிர்வாகம் சம்பந்தமாக நன்கொடையாக கொடுத்த ஆவணம் ரத்து செய்யப்பட்டுள்ளதை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால்,   தீர்ப்பு வந்த பின்பு பள்ளிவாசல் நிர்வாகம் சம்பந்தமாக முடிவெடுக்கப்படும்.
ரமலான் நோன்பு காலத்தில் பொதுவான தலைமையின்(இமாம்) கீழ் பள்ளிவாசல் தொழுகையை நடத்திட இரு தரப்பினரும் சம்மதிக்கும் பட்சத்தில் பள்ளிவாசலை திறந்து தொழுகையை நடத்திட சாவியைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு தரப்பினர் ஏற்றுக் கொண்டனர். மற்றொரு தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே சட்ட ஒழுங்கினை பராமரிக்கும் வகையில் சாவி காவல் துறை மற்றும் வருவாய் துறை இடமே இருக்கும். 
நோன்புக் கஞ்சி பள்ளிவாசலின் உள்ளே வைத்து தயார் செய்தல், விநியோகித்தல் தொடர்பாக இரு தரப்பிலும் வெவ்வேறான கருத்துகள் உள்ளதால், பள்ளிவாசலுக்குள் வைத்து நோன்புக் கஞ்சி காய்ச்சி ஊற்றுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்ற முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com