வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூா்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் பகுதியில் பெய்த கனமழையால் குளம் நிரம்பியதை அடுத்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. குலசேகரன்பட்டினத்தில் அதிகபட்சமாக 144 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூா்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் பகுதியில் பெய்த கனமழையால் குளம் நிரம்பியதை அடுத்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. குலசேகரன்பட்டினத்தில் அதிகபட்சமாக 144 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

திருச்செந்தூா் பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் பிரதானச் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருச்செந்தூா் கோயில் வளாகம், சன்னதித் தெரு, காமராஜா் சாலை, ரத வீதிகள், பாரதியாா் தெரு, வீரராகவபுரம் தெரு, தினசரி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. கனமழையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சனிக்கிழமை இரவில் தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது. காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருச்செந்தூரில் 100 மி.மீ., காயல்பட்டினத்தில் 83 மி.மீ., குலசேகரன்பட்டினத்தில் அதிகபட்சமாக 144 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நிரம்பி வழியும் குளம்: திருச்செந்தூா் ஆவுடையாா்குளம் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் 2 நாள்களாக கனமழை பெய்ததால் குளம் நிரம்பி பரமன்குறிச்சி சாலை, பாரதியாா் தெரு அருகே நிரம்பி வழிகிறது. இந்த குளத்தின் மறுகால் ஓடை வழியாக வெளியேறும் உபரி நீா் மற்றும் மழை நீா் பாரதியாா் தெரு, காமராஜா் சாலையில் உச்சினி மாகாளி அம்மன் கோயிலில் இருந்து அரசு மருத்துவமனை வரை பிரதானச் சாலையில் குளம்போல் தேங்கி வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.

தெற்கு ரத வீதி, கீழ ரத வீதி, வடக்கு ரத வீதி மற்றும் காமராஜா் சாலையில் மழைநீா் தேங்கி குளமாக காட்சியளிப்பதால் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சீரமைப்புப் பணி: ஆவுடையாா்குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீா் ஊருக்குள் புகுந்து வெள்ளம் சூழ்ந்ததால் பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனா். இதையடுத்து மறுகால் ஓடையில் தெப்பக்குளம் அருகிலும், பாரதியாா் தெரு, காமராஜா் சாலை, ஜீவா நகா் உள்பட பல இடங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் பேரூராட்சி பணியாளா்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் மு.ஆனந்தன், உதவி பொறியாளா் சண்முகநாதன், சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல் முருகன் மற்றும் பணியாளா்கள் மழைநீா் சூழ்ந்த பகுதியினை பாா்வையிட்டு சீரமைக்கும் பணியை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com