விளாத்திகுளம் பொதுப்பணித் துறை அலுவலகம் முற்றுகை

விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராம கண்மாயில் கிராம மக்களுக்கு தெரியாமல் தனிநபர்கள் குடிமராமத்து

விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராம கண்மாயில் கிராம மக்களுக்கு தெரியாமல் தனிநபர்கள் குடிமராமத்து பணியை கைப்பற்ற முயற்சி செய்வதாக கூறி விளாத்திகுளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
  விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் உள்ள கண்மாயை குடிமராமத்து திட்டதின் கீழ் புனரமைப்பு செய்வதற்கு ரூ. 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேல்மாந்தை கிராம கண்மாய்க்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சங்கம் அமைத்து தலைவர், செயலர், பொருளாளர் மறறும் உறுப்பினர்கள் தேர்வு செய்து வைப்புத் தொகை செலுத்தி கண்மாய் புனரமைப்பு பணி செய்யலாம் என விளாத்திகுளம் வைப்பாறு வடிநில கோட்ட பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
   இதையறிந்த சிலர், கிராம மக்களுக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக தூத்துக்குடி பதிவாளர் சங்கத்தில் புதிய சங்கத்தைப் பதிவு செய்து குடிமராமத்துப் பணியை கைப்பற்ற முயற்சித்துள்ளனர்.  இதுகுறித்து அறிந்த  மேல்மாந்தை  கிராம மக்கள் ஊர் கூட்டத்தை கூட்டி தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து, தூத்துக்குடி பதிவாளர் சங்கத்தில் பதிவு செய்ய சென்றனர்.  ஆனால், ஒரே கண்மாய்க்கு குடிமராமத்து பணி மேற்கொள்ள இரு பிரிவினர் விண்ணப்பித்த காரணத்தினால், யாருக்கும் சங்கத்தை பதிவு செய்ய அதிகாரிகள் முன்வரவில்லை.
   இந்நிலையில் மேல்மாந்தை கண்மாய்க்கு பாத்தியப்பட்ட பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் திங்கள்கிழமை விளாத்திகுளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களது சங்கத்தை பதிவு செய்ய வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் முழங்கினர்.
பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் முருகன், உதவி பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் போலீஸார் போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதில் மேல்மாந்தை கிராமத்தில்  செவ்வாய்க்கிழமை( ஜூலை 2)  காலை 10 மணிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு,  மேல்மாந்தை கண்மாய் பகுதிக்கு உள்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில் சங்கத்துக்கான பொறுப்பாளர்கள் தேர்வு செய்த பின்பு குடிமராமத்து பணியை தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com