ஓட்டப்பிடாரம் அருகே சிதிலமடைந்த பெருமாள் கோயிலை புனரமைக்க வலியுறுத்தல்

ஓட்டப்பிடாரம் அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள 1,500 ஆண்டுகள் பழைமையான மன்னர் காலத்து

ஓட்டப்பிடாரம் அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள 1,500 ஆண்டுகள் பழைமையான மன்னர் காலத்து பெருமாள் கோயிலை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், புதியம்புத்தூரை அடுத்துள்ளது இராஜாவின்கோவில் கிராமம். இந்தக் கிராமத்தின் வடமேற்கில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையான குலசேகரநாதர், இராஜன் கோயில் உள்ளது.  மன்னர்கள் வழிபட்டுவந்த இந்தக் கோயில் அமைந்திருக்கும் காரணத்தாலேயே இந்தக் கிராமம் இராஜாவின்கோயில் என பெயர்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
கோயில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி உடனாய பெருமாள் காட்சி தருகிறார். கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் சுவர்களில் திருப்பதி, ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ளதுபோல தமிழ்க் கல்வெட்டுகளும், குதிரை, மான் சிலைகள் உள்ளிட்ட சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும் பூஜை நடைபெறுகிறது என்றாலும், தினமும் மாலைவேளைகளில் பூசாரியால் தீபம் ஏற்றப்படுகிறது.
மிகப் பழைமையான இக்கோயிலில் எவ்வித பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாததால், அவ்வப்போது சுவரின் கற்கள் பெயர்ந்து விழுகின்றன.  தமிழக அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயிலில், அவ்வப்போது கிராம மக்கள் சில புனரமைப்புப் பணிகளைச் செய்தனர். எனினும், மழை பெய்தால் தண்ணீர் வெளியே செல்லாமல், கோயிலுக்குள்ளேயே தேங்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டபொம்மன் வழிபட்ட கோயில்?: பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் மூதாதையர்களும், வீரபாண்டிய கட்டபொம்மனும் பாஞ்சாலங்குறிச்சி அரண்மனையில் இருந்து கோயிலின் மேல்புறம் உள்ள சுரங்கப்பாதை வழியாக இங்கு வந்து யானைக்கல் என்ற தெப்பத்தில் நீராடிச் சென்றதாக செவிவழிச் செய்தி உள்ளது. தற்போது, குளம் இருந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை. இந்த இடத்தில் அகழாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் பூசாரி டி. ஊர்காவலன் தெரிவித்தார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வீரபாண்டிய கட்டபொம்மன் தீவிரமாக இருந்ததால், அவர் வந்துசென்ற இடங்களையெல்லாம் கண்காணித்து ஆங்கிலேயர்கள் தாக்கிவந்ததாகவும், அப்போது அவர்கள் எறிந்த வெடிகுண்டால் குலசேகரநாதர் - இராஜன் கோயில் கோபுரம் இடிந்துவிட்டதாகவும், சுரங்கப்பாதையையும் அவர்கள் மூடிவிட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
எனவே, சிதிலமடைந்துள்ள மிகப் பழைமையான குலசேகரநாதர், இராஜன் கோயிலை, பழைமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொண்டு, தினமும் 3 கால பூஜைகள் நடைபெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com