கோவில்பட்டி அருகே திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தம்பதிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவரும் பலத்த காயமடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தம்பதிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவரும் பலத்த காயமடைந்தார்.
கோவில்பட்டி வடக்கு புதுக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகள் சண்முகப்பிரியா (25). இவருக்கும், கோவில்பட்டியை அடுத்த இ.சத்திரப்பட்டியைச் சேர்ந்த மருதையா மகன் மாரியப்பனுக்கும் (28) கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கட்டுமானத் தொழிலாளியான மாரியப்பன், கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லவில்லையாம். இதனால், தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லையாம். இதையடுத்து, அவர்களது உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சண்முகப்பிரியா ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்துள்ளார். மாரியப்பன் பலத்த காயங்களுடன் இருந்துள்ளார்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்குவந்த டி.எஸ்.பி. ஜெபராஜ், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன் மற்றும் போலீஸார் காயமடைந்த மாரியப்பனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சண்முகப்பிரியாவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  
மாரியப்பனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாததால், அவருக்கும், மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும், தகராறு முற்றிய நிலையில், சண்முகப்பிரியா கத்தியால் தன்னை தாக்கி கொல்லமுயன்றதால், அவரிடம் இருந்த கத்தியைப் பறித்து, அவரை கத்தியால் குத்திக் கொன்றதாகவும் மாரியப்பன் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சண்முகப்பிரியா 4  மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com