பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால்அபராதம் விதிக்க ஊராட்சி நிர்வாகத்துக்கு அதிகாரம்
By DIN | Published On : 23rd June 2019 01:00 AM | Last Updated : 23rd June 2019 01:00 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க ஊராட்சி நிர்வாகத்துக்கு அதிகாரம் அளித்து ஒப்புதல் பெறப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துதலை தவிர்க்க அபராதம் மற்றும் பொருள் கைப்பற்றுகை குறித்தும், வரும் பருவமழை காலத்தில் மழை நீரை சேகரிக்கும் வண்ணம் நீர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையிலும், மாவட்டத்துக்குள்பட்ட 403 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ள உதவி இயக்குநர் நிலையிலான தொகுதி அலுவலர்கள் மேற்பார்வையில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய பற்றாளர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தின்போது, நீர் பாதுகாப்புப் பணிகளை பொதுமக்களின் உடலுழைப்பு மூலம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
மழை நீரை சேமிக்கும் வகையில், உடலுழைப்பின் மூலமாக குளங்கள் மற்றும் ஊருணிகளை ஆழப்படுத்தவும், வரத்துக் கால்வாய்களை சுத்தம் செய்யவும், கரையை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் பொதுமக்கள் அல்லது பொது அமைப்புகள் விருப்பத்துடன் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த விண்ணப்பங்கள் பெற்று கொள்ளப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துதலை தவிர்க்க அபராதம் மற்றும் பொருள் கைப்பற்றுகை குறித்த அரசு அறிவிக்கை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
தடை உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது அபராதம் விதிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிக்கும் துணை விதி ஒப்புதல் பெறப்பட்டது.