பள்ளி, கல்லூரிகள் முன்பு கண்காணிப்பில் காவலர்கள்: பெற்றோர் வரவேற்பு 


தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முன்பு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் நடவடிக்கைக்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முன்பு தினமும் காலையில் வகுப்புகள் தொடங்கும் முன்னதாகவும், மாலையில் வகுப்புகள் முடிந்த பிறகும் முன்னாள் மாணவர்கள் என்ற போர்வையில் இளைஞர்கள் சுற்றி வரும் செயல் சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. 
பெற்றோரின் புகாரின்பேரில், காவல்துறை அவ்வப்போது மேற்கொள்ளும் நடவடிக்கை தற்காலிகமானதாகவே இருந்து வந்தது. மேலும், பள்ளிக்கு வெளியே நடைபெறும் சம்பவங்களில் பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே தொடர்ந்தது.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர், மாணவிகள் வருவதால் கல்வி நிலையங்கள் முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல காத்திருக்கும் பெற்றோர், ஆட்டோ ஓட்டுநர்களும் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
இதுதவிர, கல்வி நிலையங்கள் முன்பு ஆங்காங்கே இளைஞர்கள் கூடி நின்று மாணவிகளை கேலி செய்வதும் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் இருந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக  மாநகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். பிரகாஷிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து கல்வி நிலையங்கள் முன்பு தினமும் காலை, மாலை நேரங்களில் போலீஸார் கண்காணிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். 
அதன்படி, மாநகரில் இயங்கி வரும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் முன்பும் வகுப்புகள் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவும், வகுப்புகள் முடிவடையும் நேரத்தில் ஒரு மணி நேரமும் 2 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்காணிப்பில் ஈடுபடும்போது கல்வி நிலையங்கள் அருகே தேவையின்றி சுற்றித் திரியும் இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொள்ளும் காவலர்கள் அவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர். இதுகுறித்து அந்த இளைஞர்களின் பெற்றோரிடமும் தகவல் தெரிவித்து எச்சரிக்கின்றனர். தொடர்ந்து, அப்பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சுற்றுவோர் மீது போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகளும் பதிவு செய்யப்படுகின்றன.
கல்வி நிலையங்கள் முன்பு கூடுவோரை போலீஸார் கண்காணித்து எச்சரித்து அனுப்புவதால், தங்களது குழந்தைகளை எளிதில் அழைத்துச் செல்வதாக பெற்றோர் தெரிவித்தனர். இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தினால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும், அவர்களின் பெற்றோருக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
இத்திட்டத்தை அறிமுகம் செய்த மாநகர காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆர். பிரகாஷ் கூறியது: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மட்டும் 58 கல்வி நிலையங்கள் உள்ளன. இதில், அதிகளவில் பிரச்னை உள்ள பகுதியை தேர்வு செய்து 20 இடங்களில் உதவி ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
அவர்கள் தினமும் காலை 7.30 மணி முதல் வகுப்புகள் தொடங்கும் வரையிலும், மாலை 3.30 முதல் வகுப்புகள் முடியும் வரையிலும் கண்காணிப்பில் ஈடுபடுவர். இதனால், போக்குவரத்து நெரிசல், சிறிய விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சாலைகளை கடக்க முடியாத குழந்தைகளுக்கும் அவர்கள் உதவியாக இருப்பார்கள்.
மேலும், எந்தவித உரிமமும் இல்லாமல் பள்ளிக்கு மோட்டார் சைக்கிள் கொண்டு வந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களையும் எச்சரித்து உள்ளோம். இத்திட்டத்துக்கு பெற்றோர், பள்ளி, கல்லூரி நிர்வாகம் தரப்பில் வரவேற்பு உள்ளது. 
மாணவர்கள் என்ற பெயரில் சுற்றி வந்து மாணவிகளை கேலி செய்யும் செயல் தடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு இருப்பதால் தேவைப்படும் பட்சத்தில் மாநகரம் முழுவதுள்ள கல்வி நிலையங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com