கோவில்பட்டி கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த "நீர் அளவீட்டு கருவி'
By DIN | Published On : 02nd March 2019 06:49 AM | Last Updated : 02nd March 2019 06:49 AM | அ+அ அ- |

தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் அதன் பயன்பாட்டை அளவிட்டு வழங்கும் கருவியை கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இக்கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் என்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் துறை மாணவர்களான ஜுனேகர் கெவின், இசைமுகில், தங்கசெல்வம், அஸ்பாக் அஹமத், அப்துல் ரஹீம் ஆகியோர் பேராசிரியர்கள் மகேஸ்வரி, பபிதா தங்கமலர், முகம்மது ஆதில் ஆகியோர் வழிகாட்டுதலின்படி இக்கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை இக்கருவியின் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
அப்போது மாணவர்கள் கூறியதாவது: தண்ணீர் சேமித்தலை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கருவி மாணவர், மாணவியர் விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் தண்ணீர் சேமிப்பு மற்றும் பற்றாக்குறையைப் போக்க பயன்படும். இக்கருவி பயோமெட்ரிக் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு ஒரு நாள் தேவையான தண்ணீர் அளவை நிர்ணயித்து தண்ணீர் தேவையைச் சிக்கனப்படுத்த முடியும்.
மேலும், தண்ணீர் உபயோகத்தை இணையதளம் மூலம் கண்காணிக்க முடியும். இந்த தயாரிப்பில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி தினமும் தண்ணீர் பயன்பாட்டை நிர்ணயிக்க முடியும் என்றனர்.