தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடுமானத் தொழிலாளர் சங்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில்தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த  ஆர்ப்பாட்டத்தில், "கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களில் சொந்தமாக வீடு இல்லாதவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் வீடு கட்டி கொடுக்க வேண்டும்;  தொழிலாளர்களுக்கு விபத்து சிகிச்சை- நிவாரணம் வழங்கப்பட வேண்டும்; பெண் தொழிலாளர்களுக்கு பேறுகால நிதியாக ஆறுமாத ஊதியத்துடன் ஓய்வும், ஓய்வு காலத்திற்கு ரூ. 90 ஆயிரம் நிதியும் வழங்கப்பட வேண்டும்,  60  வயதை கடந்த தொழிலாளிக்கு குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு,  சங்க துணைத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பாலசிங் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் மகாராஜன் தலைமை வகித்தார். மாவட்ட உறுப்பினர்கள் செல்வம், செல்வராஜ், மந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் அழகு போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 
விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் வட்டத் தலைவர் குணசீலன் தலைமையில் கட்டுமான தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். 
எட்டயபுரத்தில் அமைப்பின் சங்க மாவட்ட பொறுப்பாளர் நல்லையா, ஒருங்கிணைப்பாளர்   கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தொழிலாளர்கள் திரளாக திரண்டு வந்து  வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத் துணைத் தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஜானகி, கட்டடத் தொழிலாளர் சங்க வட்டத் தலைவர் உத்தண்டராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் கோரிக்கைகளை விலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  கட்டுமானத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் கோட்டை நடராஜன் தலைமையில்   தொழிலாளர்கள் திரளாக கூடி வட்டாட்சியர் சித்ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com