கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 


கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியது;  ஏப்ரல் 18 இல் நடைபெறவுள்ள தேர்தல் ஜனநாயகத்தின் திருவிழா இவ்விழா சிறப்பாக நடைபெற அனைவரும் பங்கேற்று வாக்களித்து ஒத்துழைப்பு அளிப்பது அவசியமான ஒன்று.  இத்தேர்தலில் எந்த ஒரு வாக்காளரும் வாக்களிக்காமல் இருக்கக் கூடாது.  இளம் வாக்காளர்களாகிய நீங்கள் அடையாள அட்டை பெறுவது எப்படி? மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது எப்படி? போன்ற பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 
  மாற்றுத்திறனாளிகளும் எளிதாக வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிகளில் அவர்களுக்கு தேவையான சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வேட்பு மனு தாக்கல் நிறைவு நாளான இம்மாதம் 26 வரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். வடிவம் 6 பூர்த்தி செய்து, தேர்தல் பிரிவு அலுவலகத்தில் வழங்கியும், இணையதளம் மூலமாகவும் பொயரை பதிவு செய்யலாம். 
  கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக உள்ளது. இளைஞர்கள் இக்குறையை நமது மாவட்டத்தில் மாற்றிக் காட்ட வேண்டும். ஓட்டுரிமையின் மூலமே உங்களின் எதிர்காலம், வேலை வாய்ப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை பெற உரிமையானவர்கள் ஆகிறீர்கள்என்றார் அவர். 
தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார்.   முன்னதாக கல்லூரி மாணவ, மாணவியர் இந்தியா வரைபடம் வடிவில் நின்று தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதையும், தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலியையும்  ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். 
 நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர், மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு நாடகம், மெüனநாடகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மருத்துவர் அனு,   கோட்டாட்சியர் அமுதா, வட்டாட்சியர் பரமசிவன், நகராட்சி ஆணையர் அச்சையா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் கிரி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகானந்தம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சண்முகவேல், கல்லூரி பேராசிரியர்கள் மாணவர், மாணவிகள், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சரவணப்பெருமாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  ஒன்றிய ஆணையர் கிரி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் ஆகியோர் ஏற்பாட்டில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com