உடன்குடி அருகே அய்யனார் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு
By DIN | Published On : 24th March 2019 01:00 AM | Last Updated : 24th March 2019 01:00 AM | அ+அ அ- |

உடன்குடி அருகே கூழையன்குண்டு அருள்மிகு கல்லால் அய்யனார் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா சனிக்கிழமை நிறைவு பெற்றது.
இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி தொடக்கநாளான வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் அறக்கட்டளை தலைவர் வை.ராம்குமார் தலைமையில் திருச்செந்தூர் கடலிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், இடர் நீக்கும் வேள்வி, மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பால்குட ஊர்வலம், கல்லால் அய்யனார், வைத்தியலிங்க சுவாமி, முருகர், பத்திரகாளி, பிரம்மசக்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 10 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை, சுவாமி அம்பாள் அனுக்கிரக பூஜை நடைபெற்றது.
இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பத்திரகாளி அம்மன் மஞ்சள் நீராடுதல், நள்ளிரவு 12 மணிக்கு சுடலை மாட சுவாமிக்கு அலங்கார பூஜை, சாம பூஜை, சுவாமி பரிவாரங்களுடன் தில்லைவனம் சென்று வருதல் ஆகியவை நடைபெற்றன. நிறைவு நாளான சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு காலம்மை நாடாச்சி அம்மனுக்கு பொங்கலிடுதல், அலங்கார பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு நிறைவு பூஜை, பொங்கல் வழங்குதல் நடைபெற்றது.