கோவில்பட்டியில் மாவட்ட பளு தூக்கும் போட்டி
By DIN | Published On : 24th March 2019 01:05 AM | Last Updated : 24th March 2019 01:05 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்ட ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டி கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பளு தூக்கும் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போட்டிக்கு, தமிழ்நாடு மாநில பளு தூக்கும் சங்கச் செயலர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட பளு தூக்கும் சங்கச் செயலர் சிவபெருமான் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு மாநில பளு தூக்கும் சங்கப் பொருளாளர் சீனிவாசன், சர்வதேச பளு தூக்கும் வீரர் கோபாலகிருஷ்ணன், கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தாமஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள 7 பளு தூக்கும் சங்கத்தைச் சேர்ந்த வீரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், 55 கிலோ உடல் எடை கொண்ட ஆண்கள் முதல் 109 மற்றும் அதற்கு மேல் எடை கொண்டவர்கள் வரை 10 கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ் பரிசுகளை வழங்கினார். இப்போட்டியில், முதல் இடங்களைப் பெறும் வீரர்கள் தென்னிந்திய அளவில் நடைபெறவுள்ள பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க தகுதிபெறுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட பளு தூக்கும் சங்கத் தலைவர் கணேசன் வரவேற்றார். சங்க பொறுப்பாளர் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.