தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மாநில மாநாடு
By DIN | Published On : 24th March 2019 01:06 AM | Last Updated : 24th March 2019 01:06 AM | அ+அ அ- |

தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கை மாநில மாநாடு கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த காமராஜ் (மதுரை), சுந்தரராஜ் (கயத்தாறு), ஆனந்தராஜ் (எட்டயபுரம்), கோவிந்தன் (திருமலாபுரம்), பரமசிவன் (குருவிகுளம்), இசக்கியம்மாள் (சங்கரன்கோவில்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மக்கள் ஆளுகை மையம் பொதுச் செயலர் தாஸ், ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசினர்.
மாவட்ட ஆதிதிராவிடர் பள்ளி நலக் குழு உறுப்பினர் முருகேசன், குருவிதாஸ், தோல் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த விஜயகுமார், கையால் மலம் அள்ளும் தடை சட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினர் கணேஷ்கண்ணன் ஆகியோர் பேசினர்.
காலமுறை ஊதியத்தில் மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தூய்மை தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்வித் தகுதிக்கேற்ப வாரிசுப்பணி மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் செல்லையா வரவேற்றார். முருகேசன் நன்றி கூறினார்.