வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு தீர்வு காண முடியாத பாஜக அரசு
By DIN | Published On : 24th March 2019 01:12 AM | Last Updated : 24th March 2019 01:12 AM | அ+அ அ- |

மத்திய அரசால் வேலையில்லாத் திண்டாட்டத்துக்குத் தீர்வு காண முடியவில்லை என குற்றம்சாட்டினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் சனிக்கிழமை வைகோ பிரசாரம் மேற்கொண்டார். பயணியர் விடுதி முன் திறந்த வேனில் நின்றவாறு அவர் பேசியதாவது: நடைபெறுகிற தேர்தல் ஜனநாயகமா அல்லது பாசிசமா என்கிற கேள்வியை முன்வைக்கின்ற தேர்தல். அனைத்துத் துறைகளிலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது.
ஜிஎஸ்டியால் வணிகத் துறையே பாதிப்படைந்துள்ளது. அந்நிய முதலீடுகளைக் கொண்டுவந்து சிறு வணிகர்களின் வாழ்வை நாசமாக்கக் கூடிய திட்டத்தில்தான் மத்திய அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று கூறினார்கள். ஆனால், 2 ஆயிரம் பேருக்குக்கூட வேலை கொடுக்கவில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு எந்தத் தீர்வையும் மத்திய அரசு கொண்டுவரவில்லை. அதேநேரத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கிலேயே மத்திய அரசு செயல்படுகிறது.
நாட்டை காக்கின்ற ராணுவ வீரர்களை நாம் மதிக்கின்றோம். ஆனால், அவர்களது தியாகத்தை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தப் பார்க்கிறது பாஜக.
தமிழகத்தில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என அதிமுகவினர் நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் ஏமாந்து போவார்கள்.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிற கனிமொழி பெண்கள் உரிமை, வேலையில்லாத் திண்டாட்டம், தமிழக வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்காக மாநிலங்களவையில் குரல் கொடுத்தவர். அவரை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.