"தேர்தலுக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்'
By DIN | Published On : 29th March 2019 08:54 AM | Last Updated : 29th March 2019 08:54 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு, பாஜகவின் ஐந்து ஆண்டுகால ஆட்சியின் கடைசி நேரத்தில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்றார் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: பாரதிய ஜனதா கட்சி 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துவிட்டு, தேர்தலை கருத்தில்கொண்டு கடைசி நேரத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி மாற்றப்பட்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமையும் என்றார் அவர்.
முன்னதாக, தூத்துக்குடியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மத்திய- மாநில அரசுகளை எதிர்த்துப் போராடியதால், அவர்களை அச்சுறுத்தும் வகையில் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. நாம் ஒன்றாக நின்று மண்ணைக் காக்கப் போராட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலர் கே.ஏ.எம். முகமது அபூபக்கர் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர் மீராசா, செயலர் முகமது ஹசன், பொருளாளர் திரேஸ்புரம் மீராஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.