தெற்காசிய சிலம்பம் போட்டியில் வெண்கலப் பதக்கம்: உதவி ஆய்வாளரின் மகளுக்கு எஸ்.பி. பாராட்டு
By DIN | Published On : 01st May 2019 06:27 AM | Last Updated : 01st May 2019 06:27 AM | அ+அ அ- |

நாகர்கோவிலில் நடைபெற்ற தெற்காசிய சிலம்பம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தூத்துக்குடி காவல் உதவி ஆய்வாளரின் மகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து பாராட்டினார்.
நாகர்கோவிலில் கடந்த 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்ற தெற்காசிய அளவிலான சிலம்பம் போட்டியில் இந்தியா, மலேசியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த 600 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஜெயமணியின் மகள் ஸ்வேதா கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.மேலும், அவர் மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்பம் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
இதையடுத்து, மாணவி ஸ்வேதாவை நேரில் அழைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பாராட்டு தெரிவித்ததோடு, தொடர்ந்து வெற்றி பெற தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார். அப்போது, மாணவி ஸ்வேதாவின் தந்தை ஜெயமணி உடனிருந்தார்.