தூத்துக்குடியில் 3.16 மணி நேரத்தில் 30 கி.மீ. ஓடி சாதனை படைத்த 9 வயது சிறுவன்
By DIN | Published On : 16th May 2019 06:43 AM | Last Updated : 16th May 2019 06:43 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் புதன்கிழமை உலக சாதனைக்காக 30 கி.மீ. தொலைவை 3 மணி நேரம் 16 நிமிடத்தில் கடந்து 9 வயது சிறுவன் சாதனை படைத்தார்.
தூத்துக்குடி பாரதிநகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த மணி- ஆதிலட்சுமி தம்பதியின் மகன் எஸ். சண்முகவேல் (9). தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். குத்துச் சண்டை போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில், உலக சாதனைக்காக குறைந்த நேரத்தில் அதிக தொலைவு ஓடி கடக்க வேண்டும் என முடிவு செய்த இம்மாணவர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி வஉசி கல்லூரியில் இருந்து செக்காரக்குடி பேருந்து நிறுத்தம் வரை 30 கி.மீ. தொலைவை 3 மணி நேரம் 16 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார்.
இதையடுத்து, சாதனை படைத்த மாணவர் எஸ். சண்முகவேலுக்கு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் மா. சுந்தரம், மருத்துவர் ராஜேஷ் திலக் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். மேலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டு தற்போது இந்த சாதனையை சண்முகவேல் படைத்துள்ளார் என்றார் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அவரது தந்தை எஸ்.எஸ். மணி.