ஓட்டப்பிடாரம் தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரம்

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக,

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பெ. மோகன் வெள்ளிக்கிழமை காலையில் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களிலும் தமிழக அமைச்சர்கள் பலரது முன்னிலையில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். 
மாலையில் புதியம்புத்தூரில் வாக்கு சேகரித்த அவர்,  இறுதியாக ஓட்டப்பிடாரம் சிவன் கோயில் தேரடித் திடல் முன்பு பிரசாரத்தை நிறைவு செய்தா ர். அப்போது அவர், அதிமுக அரசின் நல்ல திட்டங்கள் மக்களுக்கு தொடர்ந்து உரிய முறையில் தடையின்றி கிடைக்கவும், கிராமங்களில் நிலவும் பல்வேறு அடிப்படை பிரச்னைகளை உடனே தீர்த்து வைக்கவும் தனக்கு ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது, அமைச்சர்கள் கடம்பூர் செ. ராஜு, கே.டி ராஜேந்திர பாலாஜி, ஆர். காமராஜ், மணிகண்டன், விஜயபாஸ்கர், வி.எம். ராஜலட்சுமி, சேவூர் ராமச்சந்திரன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் க. கிருஷ்ணசாமி, நடிகர் ஆர்.சரத்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக, அதிமுக வேட்பாளர் மோகன், காலையில் மீனாட்சிப்பட்டி, அணியாபரநல்லுர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக தெற்கு மாவட்டச் செயலர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் வீதி வீதியாகச் சென்று வாக்குகள் சேகரித்தார்.
இதில், அதிமுக ஒன்றியச் செயலர் ஆறுமுகநயினார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் ராஜ்நாராயணன்,  மாவட்ட வழக்குரைஞர் பிரிவு பொறுப்பாளர் கருப்பசாமி, மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை இணைச்செயலர் காசிராஜன்,  நகரச் செயலர்கள் ஸ்ரீவைகுண்டம் காசிராஜன், ஆழ்வார்திருநகரி செந்தில் ராஜ்குமார், பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றியச் செயலர் ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். 
திமுக வேட்பாளர் எம்.சி. சண்முகையா காலையில் தருவைக்குளம், மேலஅரசடி, ஓட்டப்பிடாரம், ஓசனூத்து, புளியம்பட்டி, வல்லநாடு தெய்வச்செயல்புரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். 
இறுதியாக தூத்துக்குடி மாப்பிளையூரணியில் பிரசாரத்தை நிறைவு செய்தார். வேட்பாளருடன், தெற்கு, வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கீதாஜீவன், தொகுதி பொறுப்பாளர் கணேசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அமமுக வேட்பாளர் ஆர்.சுந்தர்ராஜ் தூத்துக்குடி சிலுவைப்பட்டியில் பிரசாரத்தை முடித்தார். அப்போது, அக்கட்சியின் தென்மண்டல பொறுப்பாளர் எஸ்.மாணிக்கராஜா, அமைப்புச் செயலர்கள் காமராஜ், ஆர்.பி.ஆதித்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு. அகல்யா புதுக்கோட்டையிலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எம்.காந்தி ஓட்டப்பிடாரத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர். 
மேலும், தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் தேர்தல் விதிமுறைகளின்படி பிரசாரத்தை முடித்துக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com