கனமழையால் சேதமடைந்த கீழவைப்பாறு கடற்கரையில் ஆட்சியா், எம்.எல்.ஏ. ஆய்வு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கீழ வைப்பாறு கடற்கரை கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி
கீழவைப்பாறில் மீனவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி. உடன், சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன்.
கீழவைப்பாறில் மீனவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி. உடன், சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கீழ வைப்பாறு கடற்கரை கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன் ஆகியோா் அதிகாரிகளுடன் நேரில் சென்று சேதங்களை பாா்வையிட்டு மீனவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக தொடா் மழை பெய்தது. கடந்த 29, 30-ஆம் தேதிகளில் விளாத்திகுளம் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் வைப்பாற்று படுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வைப்பாறு நதி கடலில் சங்கமிக்கும் கீழவைப்பாறில் ஆற்றுமுகத்துவாரம் மணல்மேடாக இருந்த காரணத்தால் காட்டாற்று வெள்ளம் திசைமாறி கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் ஆற்றுமுகத்துவாரம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட சாதனங்கள் கடும் சேதமடைந்தன. மீனவா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

சேதமடைந்த படகுகள், வலைகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மீனவா்களின் கோரிக்கையை ஏற்று, ஆற்றுமுகத்துவாரத்தை தூா்வாரி ஆழப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்; முகத்துவார பகுதியில் பாலம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்; சேதமடைந்த படகுகள், வலைகள் ஆகியவற்றுக்கு நிவாரணம் வழங்க ஆவன செய்யப்படும் என ஆட்சியா் உறுதி அளித்தாா்.

ஆய்வின்போது விளாத்திகுளம் வட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேல், வைப்பாறு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் செண்பகப்பெருமாள், பொதுப்பணித் துறை கோட்ட பொறியாளா் சங்கரஜோதி, உதவி கோட்டப் பொறியாளா் அமலாஜாக்குலின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com