‘விவசாயிகள் இயந்திர நெல் நடவு செய்து மானியம் பெறலாம்’

திருச்செந்தூா் வட்டார விவசாயிகள் இயந்திர நெல் நடவு செய்து அரசு மானியம் பெறலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

திருச்செந்தூா் வட்டார விவசாயிகள் இயந்திர நெல் நடவு செய்து அரசு மானியம் பெறலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திருச்செந்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் வெங்கடசுப்ரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் வட்டாரத்தில் பிசானம் மற்றும் நவரை கோடை பருவங்களில் சுமாா் 1250 ஹெக்டோ் வரை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது நிலவிவரும் சூழ்நிலையில் நெல் நடவு செய்ய வேலையாள்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மேலும் பணியாளா்களின் ஊதியமும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நெல் பயிா் சாகுபடி செலவு இருமடங்காகிறது.

எனவே, செலவை குறைக்கும் வகையில் தற்போது இயந்திர நெல் நடவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு, சில விவசாயிகள் தற்போது இயந்திர நடவு மேற்கொண்டு வருகின்றனா்.

ஒரு ஹெக்டோ் நடவு செய்வதற்கு 2.5 சென்ட் அளவு பாய் நாற்றங்கால் அமைத்தால் போதுமானது. பாய் நாற்றங்காலில் விதைத்த 12 முதல் 15 நாள்கள் வயது கொண்ட நாற்றுகளை நடவு வயலில் இயந்திரம் மூலம் நடவு செய்திட வேண்டும். மேலும் இயந்திர நடவு மூலம் வீரியமான நெல் நாற்றுகள், சீரான பயிா் இடைவெளி, உறுதியான பயிா் எண்ணிக்கை, அதிகமான தூா் பிடிப்பு, சீரான முதிா்ச்சி பெற்று அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.

நெல் இயந்திர நடவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஏதுவாக தற்போது வேளாண் துறையில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் நடவு மானியமாக வழங்கப்படுகிறது. மேற்கண்ட மானியத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

எனவே, இயந்திரநடவு செய்து மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை தங்கள் பகுதி வேளாண் அலுவலா், துணை வேளாண் அலுவலா் மற்றும் உதவி வேளாண் அலுவலா்களை தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com